தொலைந்த பணப்பை, தொலையாத மனிதம்…

காலை வேளையில் நான் என் தந்தையுடன் கடைக்கு செல்ல வேண்டியிருந்தது. கடையின் அருகில் சென்ற பின் என் தந்தை தன் பணப்பை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்தார். இரண்டு விதமான குழப்பம் அவருக்கு ஏற்ப்பட்டது. ஒன்று தான் எடுத்து வரவில்லை, மற்றொன்று எடுத்து வந்ததாக.
பின்னர், நான் என் மனைவியை தொலைபேசியில் அழைத்து விவரம் தெரிவித்து பணப்பையை தேட சொன்னேன். சிறிது நேரத்தில், எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற தகவல் வந்தது.
நாங்கள் வீடு திரும்பிய பின்னர், எங்களது தேடுதல் தொடர்ந்தது. என் தந்தையின் பழக்கம், எப்போதும் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது. ஆனாலும் பொருள் கிடைக்கவில்லை. அவரது கவலை அதிகரித்தது, தொலைந்தது பணம் மட்டுமல்ல இதர வங்கி பரிவர்த்தனை அட்டை, நிரந்தர கணக்கு அட்டை (PAN), இப்படி பல அட்டைகள். இவை அனைத்தும் மிகவும் இன்றியமையாதவைகள் என்பதால் எல்லாவற்றையும் திரும்ப பெற வேண்டுமே என்ற கவலை. தற்போது வாழ்க்கை அட்டைகளை சுற்றியே…
இதே நேரம், வீட்டு வாசலில் ஒருவர் தானியங்கி (ஆட்டோ)) ஓட்டுனர், மற்றவர் பால் விற்பனையாளர் என இருவர். ஒருவர் கையில் ஒரு விலாசம் குறித்த அட்டையுடனும், மற்றொருவர் பணப்பையுடனும். அருகாமையில் உள்ள தெருவில் கிடந்ததாக கூறினார்கள். என் தந்தை, தன் வாழ்நாளில் முதன்முறையாக தொலைத்த பணப்பையுடன், இருவர் நிற்பதை கண்டு மன மகிழ்வும், மன அமைதியும் அடைந்த வார்த்தைகளற்ற நிமிடங்கள்.
வந்தவர்கள் இருவரும் வெறும் நன்றியை மட்டுமே பிரதிபலனாக பெற்றுக்கொண்டு, மற்றவைகள் எதுவும் வேண்டாம் என மறுத்து விட்டனர்.
நெல்லை மகாராஜநகர் சேவை இல்லம் பேருந்து நிறுத்தம் (கனரா வங்கி) அருகில் உள்ள தானியங்கி (ஆட்டோ) நிறுத்தத்தில் உள்ள திரு. மாரிமுத்து, TN72-AJ 0135, மாலதி கேப்ஸ், மற்றவர் திரு. ஐய்யப்பன் – என இருவருக்கும் இந்த பதிவின் மூலம் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
நல்லார் ஒ(இ)ருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை…மழை பெய்கிறது…

Advertisements