மாற்றம் ஏற்பட்டதா ?

நாணயத்திற்கு இரண்டு பக்கம், ஆனால் அதன் மதிப்பு ஒன்றுதான்.
இவர்களோ,அவர்களோ …மாற்றம் நம்மிடம் தான் ஏற்படவேண்டும்.

முதலில் நாம் நம் மீது நம்பிக்கை வைப்போம். அதோடு, பிறர் மீது நம்பிக்கை வைப்போம்.

இத்தனை நாள் ஓட்டு போட்டதும் நாம் தான், இனி ஓட்டு போடப்போவதும் நாம் தான்.

நம் கடமை வெறும் ஓட்டு போடுவது மட்டுமல்ல. யாருக்கு, எதற்காக ஓட்டு போடுகிறோம் என்பதும் முக்கியம். தற்போதைய நிலையில் இவர் தலைமை சரியில்லைதான் (பாவம், அவர் என்ன செய்வார் ?).

மற்றவரின் தலைமையில் எல்லாம் சரியாகிவிடுமா ?.

பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே நமக்கு தெரியாது, நாம் பார்க்கவும் மாட்டோம். (அப்படி ஏதாவது நடந்தாலும் முகநூலில்-FB புகைப்படம் பிடித்து போடத்தான் ஆர்வம் காட்டுவோம்). அந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியாது.

ஆனால் நாம் விளம்பரம் பார்க்கிறோமே, அது போதும் நமக்கு.

இங்கு நம் வாழ்க்கையே விளம்பரம் ஆகிப்போனது, முகநூலில்.

விக்ரமன் பட கதாநாயகன் போல நல்லவன் இங்கு யாரும் கிடையாது.

தனிப்பட்ட உள் எண்ணங்கள் ஒவ்வொரு நபர்களுகுள்ளும் ஒழிந்திருக்கும். நாம் நல்லவர்கள் என நாமே நடிக்கிறோம்.

சிலருக்கு ஆஸ்கர் கிடைக்கிறது, சிலருக்கு கிடைப்பதில்லை, பலர் விரும்புவதில்லை.

இரண்டாயிரம் உயிர்கள் பலி என ஒரு பிரிவினர் சொல்கிறார்கள், அப்படி இல்லை எங்கள் பிரிவிலும் இருநூறு உயிர்கள் பலி என்கிறார்கள். உயிர் எல்லோருக்கும் சமம்தான். இழப்பின் வலி இழந்தவனுக்கு தான் தெரியும். இங்கு இறந்தவன் என் சக இந்தியன் என்று யாரேனும் எண்ணி பார்த்தீர்களா ? அவன், இவன் என்றுதான் இங்கு விவாதங்கள் போகிறது.

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்னர் அரசியலுக்கு மூன்று அப்பாவிகள் பலியானர்கள். (அரசியலுக்கு மூன்று பேர் மற்றும் வேறு ஒருவர், ஆன்மீகத்தில் ஒருவர் என), அதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. மக்களும் அதை இப்போது மறந்துவிட்டார்கள். தமிழகத்தில் மூன்று அப்பாவிகள், அங்கு இரண்டாயிரத்துஇருநூறு அப்பாவிகள் யாருக்காகவோ பலியாக்கப்பட்டனர். மூன்று மறந்துவிட்டது மற்றது மறக்கவில்லை. ஆனால், காலம் இதையும் மறக்கச் செய்துவிடும்.

ஒவ்வொரு வன்முறையும் வறியவனை தான் பாதிக்கிறது. இது தலைமுறை தலைமுறையாக கடந்து போகிறது.

வன்முறை யார் செய்தாலும் தவறுதான்.

தவறுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதற்கான மூலக்காரணம் எதுவென்று யாரும் யோசிப்பதில்லை.  தீர்வுகளும் இங்கில்லை.

சில வருடத்திற்கு முன் வரை நன்றாகத் தான் இருந்தது. இத்தனை வன்முறை, தீவிரவாதம், பயம் ஏதும் இல்லையே. ஆனால் இப்போது சக மனிதனையும் சந்தேக கண் கொண்டே பார்க்கிறோம். அமெரிக்காவின் பயம் கலந்த வாழ்க்கை முறை நமக்கும் வந்துவிட்டது.

அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாறிகொண்டிருக்கிறோம் என்பதும் ஒரு உண்மை. அங்கு அதிபர் தேர்தல் போல நம் பிரதமர் தேர்தலும் பயனிக்கிறது. வாக்கு சேகரிக்க அமெரிக்க அதிபராக போட்டி இடுபவர்

பிரசார மேடையில் தன் உடல் மொழியால் (கையசைவுகளும்,சிரிப்புகளும்) மக்களை கவர்கிறார். தற்போது நம் நாட்டிலும் அதே போன்ற கையசைவுகளையும்,சிரிப்புகளையும் காணலாம். நடை, உடை, பாவனையில் அனேக மாற்றம்.

ஒரு குழந்தை என்னிடம் கேட்டது, ‘அந்த முதல்வர் பொய்யே சொல்ல மாட்டாரா ?’. என்ன பதில்    சொல்ல ?

காந்தியே பொய் சொன்னார், அவர் ஒத்துக் கொண்டார்.

நாம் அவரையும் கொண்டாடுகிறோம், இவரையும் கொண்டாடுகிறோம், கொண்டாடப் போகிறோம். சந்தர்ப்பங்கள் இங்கு சாதகமாக்கப்படுகிறது.

கடந்தமுறை மாற்றம் ஏற்படுத்தாது மக்களின் தவறு. தவறுகள் திருத்தப்பட வேண்டும். மாற்றம் ஏற்படலாம், மாற்றம் ஏற்படுவது நல்லதே, மாற்றம் அனைத்து மக்களுக்கும் சாதகமான நல்ல மாற்றமாக அமையட்டும்.

சக மனிதனை மதம் கொண்டு பார்க்காதீர்கள், மனிதம் கொண்டு பாருங்கள்.

நாற்பது வருடத்திற்கு முன் நான் எடுத்த உறுதிமொழி, இன்று என் பிள்ளைகளும் எடுக்கிறார்கள். ‘இந்தியா எனது நாடு, இந்தியர் அனைவரும் என் உடன்பிறப்புகள்’, இந்த உறுதிமொழி சம்பிரதாய சடங்காக எடுக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும், உளப்பூர்வமாக மாற வேண்டும், மாற்றம் வேண்டும்.

புதியவர்கள் வரட்டும், மனம் மலரட்டும், மனிதம் மலரட்டும்.

இந்தியா வளமாகட்டும், வல்லரசாகட்டும்.

பின் குறிப்பு : கடந்த தேர்தலுக்கு முன் எழுதிய பதிவு.

அன்றைய நம்பிக்கை இப்போது எந்த அளவில் உள்ளது ?

Advertisements